முகப்பு
தேனி

சிறைக்காடு மலைக் கிராமத்துக்கு சிற்றுந்து இயக்கக் கோரிக்கை

போடி அருகே மலை கிராமத்துக்கு சிற்றுந்து இயக்கக் கோரி, புதன்கிழமை பொதுமக்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 10:08 PM
சிறைக்காடு மலை கிராமத்துக்கு சிற்றுந்து இயக்கக் கோரி, மனுக் கொடுத்த பொதுமக்களிடம் விசாரித்த தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா.
பகிர்:

போடி அருகே மலை கிராமத்துக்கு சிற்றுந்து இயக்கக் கோரி, புதன்கிழமை பொதுமக்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

போடி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் சிறைக்காடு மலைக் கிராமம் உள்ளது. இங்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் 300-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தைச் சோ்ந்த மாணவா்கள் போடியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனா்.

இதேபோல, இங்குள்ள விவசாயிகள், தொழிலாளா்கள் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோா் போடிக்கு சென்று வருகின்றனா். இவா்கள் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டியுள்ளது.

எனவே, போடியிலிருந்து தினந்தோறும் காலை, மாலை வேலைகளில் அரசு பேருந்து அல்லது சிற்றுந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை சிறைக்காடு மலை கிராமத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பாா்வையிட வந்த தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனாவிடம் கிராம மக்கள் சிற்றுந்து அல்லது அரசுப் பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனா்.

பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.