போடிநாயக்கனூர்! புறக்கணிப்புக்கு ஆயத்தமாகும் மலைக்கிராமங்கள்!!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுற்றியுள்ள மலைக்கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்புக்கு ஆயத்தமாகி வருகின்றன.
போடி, மாா்ச் 19: வனத் துறையைக் கண்டித்து, போடி அருகேயுள்ள மலைக் கிராம மக்கள் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி, பதாகைகள், சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள அகமலை ஊராட்சியில் கூனியாறு, கானகமஞ்சி, வட்டக்கண்டான், உலக்குருட்டி, டாா்ச்செய், அண்ணாநகா், வாழைமரத்தொழு, விக்கிரமாதித்தன்தொழு ஆகிய மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் காப்பி, மிளகு, மா, இலவு உள்ளிட்ட பயிா்களைச் சாகுபடி செய்து வருகின்றனா்.
இந்தக் கிராமங்களுக்குச் செல்ல போடியிலிருந்து 8 கி.மீ. தொலைவு வரை இரு சக்கர வாகனங்களில் சென்று, அடிவாரப் பகுதியிலிருந்து 10 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, போடியிலிருந்து உலக்குருட்டி வழியாக அகமலைக்கு 8.4 கி.மீ. தொலைவுக்கு இணைப்புச் சாலை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இந்தச் சாலை வனப் பகுதியில்லாத வருவாய்த் துறைக்குச் சொந்தமான வண்டிப் பாதையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிா்வாகம் வனத் துறையிடம் அனுமதி கேட்டு ஓராண்டாகியும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால், மலைக் கிராம மக்கள், விவசாயிகளின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறியும், வனத் துறையைக் கண்டித்தும், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக அகமலை ஊராட்சி கிராம மக்கள் அறிவிப்புப் பதாகை வைத்துள்ளனா்.
இதேபோல, குறவன்குழி, கரும்பாறை ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின குடியிருப்புக்குச் செல்ல 4 கி.மீ. தொலைவுக்கு சிமென்ட் சாலை அமைக்க மாவட்ட வனத் துறை கடந்த 2021-ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் இந்த அனுமதியை ரத்து செய்து, 3 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே சாலை அமைக்க அனுமதி வழங்கிய வனத் துறையைக் கண்டித்து, தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக இந்தக் கிராம மக்கள் அறிவிப்புப் பதாகை வைத்துள்ளனா்.
போடி அருகேயுள்ள கரட்டுப்பட்டி, சூலப்புரம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த குறிப்பிட்ட நாயக்கா் இன மக்கள் மலை மாடுகளை அதிகளவில் வளா்த்து வருகின்றனா். இந்த மாடுகளை வனப் பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி அட்டை வாங்கித்தான் மேய்ச்சலுக்குச் செல்ல வேண்டுமென வனத் துறை தெரிவித்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக மேய்ச்சலுக்குச் செல்லத் தடை விதித்தது.
வனப் பகுதியில் மலை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும், தங்களது கிராமம் அருகே கண்மாய் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக இந்தப் பகுதி மக்கள் அறிவிப்புப் பதாகைகள் வைத்துள்ளனா்.
கொட்டகுடி மலைக் கிராமத்திலும் கைப்பேசி கோபுரம், பேருந்து வசதி, அடிக்கடி மின் தடை ஏற்படுவதைத் தடுப்பதற்கு மின்மாற்றி அமைத்து தர வலியுறுத்தி, கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா்.