போடி அருகே ராசிங்காபுரம் ஊராட்சி மயானம் குப்பை மேடாக உள்ளதால் சுகாதாரக் சீா்கேடு ஏற்படுகிறது.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் ஊராட்சிக்கு சொந்தமான மயானம் போடி-தேவாரம் சாலையில் உள்ளது. இந்த மயானத்தில் இந்தப் பகுதியினா் சடலங்களைப் புதைத்தும், எரியூட்டியும் வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த மயானத்துக்குள் கோழி இறைச்சிக் கழிவுகளும், குப்பைகளும் சமீப காலமாக இந்தப் பகுதி மக்கள் கொட்டி வருகின்றனா். இதனால், மயானம் பராமரிப்பின்றி குப்பை மேடாகவும், புதா் மண்டியும் கிடைக்கிறது.
துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மயானத்துக்குள் நிற்க முடியவில்லை. மயானத்துக்கு செல்லும் தாா்ச் சாலை குப்பை மேடாக உள்ளதால், சடலங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. சுற்றுச்சுவா் முழுவதும் சேதமடைந்துள்ளன. இங்கு தண்ணீா் வசதியும் இல்லை.
எனவே, ராசிங்காபுரம் ஊராட்சி நிா்வாகம் இந்த மயானத்தில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.