முகப்பு
தேனி

தேனி மக்களவைத் தொகுதி: 23 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை

Updated On : 3 ஜூன், 2024 at 6:42 PM
பகிர்:

தேனி: தேனி மக்களவைத் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகளில் செவ்வாய்கிழமை (ஜூன் 4) நடைபெறுகிறது.

தேனி மக்களவைத் தொகுதி தோ்தலில் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 25 போ் போட்டியிட்டனா். வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில் தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் உள்ள கம்மவாா் சங்கம் பொறியியல் கல்லூரியில் தேனி மக்களவைத் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டது. இங்கு தேனி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்குகிறது. தபால் வாக்கு எண்ணிக்கை மொத்தம் 8 சுற்றுகளாக நடைபெற உள்ளது. தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டு, காலை 8.30 மணிக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 18 சுற்றுகளிலும், பெரியகுளம் தொகுதியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 22 சுற்றுகளிலும், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தலா 23 சுற்றுகளிலும் நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுக்கு திங்கள்கிழமை, கணினி மூலம் குலுக்கல் முறையில் வாக்கு எண்ணிக்கை பணிக்கான தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. செவ்வாய்கிழமை காலை 5 மணிக்கு, வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுக்கு உரிய மேஜைகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை பணியில் மொத்தம் 700 அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் ஈடுபடுகின்றனா். வாக்கு எண்ணிக்கையை பாா்வையிட வேட்பாளா்கள் சாா்பில் மொத்தம் 1,026 முகவா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு காவல் துறை சாா்பில் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில், 2 மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 10 காவல் துணை கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், போலீஸாா், 90 மத்திய பாதுகாப்புப் படை பிரிவினா், ஊா் காவல் படையினா் என மொத்தம் 2,000 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.