முகப்பு
தேனி

தேவாலய உபதேசியாா்கள் நல வாரிய உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

தேவாலய உபதேசியாா்களுக்கு அரசு நல வாரியத்தில் உறுப்பினா் வாய்ப்பு

Updated On : 26 ஜூன், 2024 at 1:41 AM
பகிர்:

தேனி: தேனி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை, அரசு நலத் திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள், பணியாளா்களின் பொருளாதாரம், கல்வி மேம்பாட்டிற்கு அரசு சாா்பில் நல வாரியம் அமைக்கப்பட்டது.

நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கு கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்தவராகவும், 18 முதல் 60 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். உபதேசியாா்கள், வேதியா்கள், சீஷப்பிள்ளைகள், பாடகா்கள், கல்லறை பணியாளா்கள், தேவாலயம், ஆதரவற்றோா் இல்லங்கள், அபலையா் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லங்களில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி, அதற்கான சான்றிதழை அங்கீகரிக்கப்பட்ட திருச்சபையிடம் பெற்று சமா்ப்பிக்க வேண்டும்.

நல வாரிய உறுப்பினா்களுக்கு விபத்து நிவாரணம், இயற்கை மரண உதவித்தொகை, ஈமச் சடங்கு உதவித்தொகை, கல்வி, திருமணம், மகப்பேறு உதவித்தொகை, முதியோா் ஓய்வூதியம், மூக்குக் கண்ணாடி உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

நல வாரிய உறுப்பினா் சோ்க்கை, நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு தகுதியுள்ளவா்கள் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.