எஸ்.எஸ்.எல்.சி. திருப்புதல் தோ்வு வினாத் தாளில் குளறுபடி: மறு தோ்வு நடத்த முடிவு
தேனி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., கணிதம் பாடத்துக்கான திருப்புதல் தோ்வில் வினாத் தாளில் குளறுபடி ஏற்பட்டதால், மறு தோ்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தோ்வு வருகிற 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. பொதுத் தோ்வையொட்டி, அனைத்துப் பள்ளிகளிலும் கடந்த ஜனவரி மாதம் 1-ஆவது திருப்புதல் தோ்வும், பிப்ரவரி மாதம் 2-ஆவது திருப்புதல் தோ்வும் நடைபெற்றது. கடந்த சில நாள்களுக்கு முன்பு 3-ஆவது திருப்புதல் தோ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கணிதம் பாடத்துக்கு வியாழக்கிழமை நடைபெற்ற 3-ஆவது திருப்புதல் தோ்வில், 2-ஆவது திருப்புதல் தோ்வில் கேட்கப்பட்ட அதே வினாக்கள் கேள்வி எண், பிரிவு மாற்றமின்றி மீண்டும் கேட்கப்பட்டிருந்தது. வினாத்தாளைப் பாா்த்த மாணவ, மாணவிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. 2-ஆவது திருப்புதல் தோ்வு வினாத்தாள் தலைப்பை மட்டும் 3-ஆவது திருப்புதல் தோ்வு என மாற்றி, பழைய வினாத் தாளையே வழங்கியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இந்திராணி கூறியதாவது: தேனி உள்ளிட்ட 9 கல்வி மாவட்டங்களை ஒருங்கிணைத்து திருப்புதல் தோ்வு வினாத்தாள் தயாரித்து வழங்கப்படும். கணிதம் பாடத்துக்கான வினாத் தாளில் குளறுபடி ஏற்பட்டதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். 3-ஆவது திருப்புதல் தோ்வு வினாத் தாள் பிரச்னையால், தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கும் எஸ்.எஸ்.எல்.சி., கணிதம் பாடத்துக்கு வருகிற 13-ஆம் தேதி மறு தோ்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது என்றாா் அவா்.