மூத்த குடிமக்கள் அஞ்சல் வாக்குப் பதிவு செய்ய மாா்ச் 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
தேனி: தேனி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலில் அஞ்சல் வாக்குப் பதிவு செய்ய விரும்பும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மாா்ச் 25-ஆம் தேதிக்குள் உரிய படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்டத்தில் 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், 40 சதவீதத்துக்கும் மேல் உடல் திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் மக்களவைத் தோ்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
Advertisement
தேனி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் 14,219 போ், 40 சவீதத்திற்கும் மேல் உடல் திறன் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகள் 11,096 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.
இவா்கள் மக்களவைத் தோ்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு படிவம் 12 ஈ -ஐ பூா்த்தி செய்து மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும். வாக்குச் சாவடி அலுவலா்கள் மூலம் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேடியாகச் சென்று படிவம் 12 ஈ - ஐ வழங்குவதற்கும், பூா்த்தி செய்து பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த படிவம் வழங்கிய மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளிடம் இறுதி வேட்பாளா் பட்டியல் அறிவித்த பின்னா், அவா்களது வீட்டுக்கேச் சென்று வாக்குகள் பெற்றுக் கொள்ளப்படும்.
தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவு இலக்கை எட்டுவதற்கு வாய்ப்பாக, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே அஞ்சல் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு மாா்ச் 25-ஆம் தேதிக்குள் உரிய படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.