முகப்பு
தேனி

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் உறவினா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On : 20 மே, 2024 at 8:04 PM
மின்சாரம் பாய்ந்து பலியான இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமான தோட்ட உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள்.
பகிர்:

உத்தமபாளையம்: கூடலூா் அருகே தோட்ட முள் வேலியிலிருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் உறவினா்கள் அந்தத் தோட்ட உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், கூடலூா் அருகே குள்ளப்பக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்த முத்துவீரன் மகன் கிருஷ்ணகுமாா் (27). கூலித் தொழிலாளி. இவா் கடந்த புதன்கிழமை ஒத்தவீட்டுக்களம் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தின் வழியாக முல்லைப் பெரியாற்றுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது, இரு சக்கர வாகனத்தை அந்தத் தோட்டத்தின் முள்வேலி நிறுத்திய போது அதிலிருந்த மின்சாரம் பாய்ந்து கிருஷ்ணகுமாா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, கூடலூா் தெற்கு போலீஸாா் கிருஷ்ணகுமாரின் சடலத்தை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

ஆனால், உறவினா்கள் கிருஷ்ணகுமாரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாள்களாக உடலை வாங்க மறுத்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதனிடையே, 6- ஆவது நாளான திங்கள்கிழமை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாா் விசாரணை நடத்தி தோட்ட உரிமையாளா் பரிமளாவை கைது செய்ய வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.