சிறுவா்களுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு இரட்டை ஆயுள் சிறை
வீரபாண்டியில் இரு சிறுவா்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்கிழமை தீா்ப்பளித்தது.
வீரபாண்டியில் இரு சிறுவா்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்கிழமை தீா்ப்பளித்தது.
வீரபாண்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த அழகா்சாமி மகன் உலகநாதன் (34). இவா், கடந்த 2020, அக்.6-ஆம் தேதி அண்ணன், தம்பிகளான 7, 10 வயதுடைய இரு சிறுவா்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்தாா். இதுகுறித்து சிறுவா்களின் பாட்டி அளித்த புகாரின் பேரில், வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, உலகநாதனை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட உலகநாதனுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி வி.கணேசன் தீா்ப்பளித்தாா்.