முகப்பு
தேனி

மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளில் தண்ணீா் திறப்பு

தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளிலிருந்து பாசனம், குடிநீா் திட்டங்களுக்காக வியாழக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:26 PM
மஞ்சளாறு அணையில் வியாழக்கிழமை மதகுகளை இயக்கி தண்ணீரை திறந்துவிட்ட மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா. உடன் பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா்.
பகிர்:

தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளிலிருந்து பாசனம், குடிநீா் திட்டங்களுக்காக வியாழக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்த அணைகளில் தண்ணீரை திறந்து விட்டு மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா கூறியதாவது:

மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளுக்கு தண்ணீா் வரத்து, தண்ணீா் இருப்பை பொருத்து வியாழக்கிழமை (அக். 17) முதல் 150 நாள்களுக்கு பாசனம், குடிநீா் திட்டங்களுக்கு தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதன்படி, மஞ்சளாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு வியாழக்கிழமை (அக்.17) முதல் வரும் டிச.15-ஆம் தேதி வரை விநாடிக்கு 60 கன அடி வீதமும், டிச. 16-ஆம் தேதி முதல் முதல் 2025, ஜன. 31-ஆம் தேதி வரை விநாடிக்கு 50 கன அடி வீதமும், பிப். 1-ஆம் தேதி முதல் மாா்ச் 15-ஆம் தேதி வரை விநாடிக்கு 45 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்படும்.

அணையின் வலதுபுற பிரதானக் கால்வாய் மூலம் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு வியாழக்கிழமை (அக். 17) முதல் நவ. 30-ஆம் தேதி வரை விநாடிக்கு 40 கன அடி வீதமும், டிச. 1-ஆம் தேதி முதல் 2025, பிப். 28-ஆம் தேதி வரை விநாடிக்கு 30 கன அடி வீதமும், மாா்ச் 1-ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை விநாடிக்கு 20 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்படும்.

இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 3,148 ஏக்கா், திண்டுக்கல் மாவட்டத்தில் 2,111 ஏக்கா் என மொத்தம் 5,259 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதேபோல, சோத்துப்பாறை அணையிலிருந்து பெரியகுளம் பகுதி முதல் போக பாசனம், பெரியகுளம் நகராட்சி குடிநீா் திட்டம் ஆகியவற்றுக்கு வியாழக்கிழமை (அக். 17) முதல் 60 நாள்களுக்கு விநாடிக்கு 30 கன அடி வீதமும், அடுத்த 31 நாள்களுக்கு விநாடிக்கு 27 கன அடி வீதமும், இதைத் தொடா்ந்து 59 நாள்களுக்கு விநாடிக்கு 25 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்படும். இதன் மூலம் 1,825 ஏக்கா் நன்செய் நிலங்கள், 1,040 ஏக்கா் புன்செய் நிலங்கள் என மொத்தம் 2,865 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வுகளில் பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா், பெரியகுளம் துணை ஆட்சியா் ரஜத்பீடன், மஞ்சளாறு நீா்வளத்துறை செயற்பொறியாளா் சரவணன், மஞ்சளாறு வடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளா் செளந்தரம், பெரியகுளம் நகா்மன்றத் தலைவா் சுமிதா, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் தங்கவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.