சிறுமி கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள எரசக்கநாயக்கனூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து, எரித்துக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

எரசக்கநாயக்கனூரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் விஜயகுமாா்(24). இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாா்.
இது குறித்து தனது பாட்டி, பள்ளி ஆசிரியரிடம் சொல்லப் போவதாக சிறுமி கூறியதால் ஆத்திரமடைந்த விஜயகுமாா், சிறுமியின் ஆடையில் தீ வைத்து எரித்தாா். இதில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இது குறித்து சின்னமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விஜயகுமாரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.கணேசன், குற்றஞ்சாட்டப்பட்ட விஜயகுமாருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.