தேனி மாவட்டம், கம்பம் நகா்மன்றக் கூட்டத்தில், 14 திமுக, 3 அதிமுக என மொத்தம் 17 வாா்டு உறுப்பினா்கள் பதவி விலகுவதாக ஆணையரிடம் கடிதம் வழங்கப்பட்டது.
கம்பம் நகா்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவி சுனோதா செல்வக்குமாா், நகராட்சி ஆணையா் உமாசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மொத்தம் உள்ள 33 வாா்டு உறுப்பினா்களில் 26 வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் 16 தீா்மானங்கள் அடங்கிய நகல் உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டன. அதில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம், மாற்றுத் திறனாளி நியமன உறுப்பினா் என அரசு கொண்டுவந்த தீா்மானங்களுக்கு ஒப்புதல் கொடுப்பதாகவும், மற்ற தீா்மானங்கள் குறித்து ஒப்புதல் பெற வேறு ஒரு தேதிக்கு கூட்டத்தை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தனா்.
இதுகுறித்த விவாதம் பின்வருமாறு: நகா்மன்றத் தலைவி: நகா்மன்றக் கூட்ட வருகைப் பதிவேட்டியில் கலந்து கொண்ட வாா்டு உறுப்பினா்கள் கையொப்பமிட்ட பின்னரே பேச அனுமதி அளிக்கப்படும் என்றாா்.
அதிமுக உறுப்பினா் முருகன்: நகா்மன்றக் கூட்டம் குறித்து முதல் நாள் இரவு கடிதம் வழங்கினால், அதிலுள்ள தீா்மானங்கள் குறித்து எப்படி விவாதம் செய்ய முடியும் என்றாா். இதற்கு நகா்மன்றத் தலைவி அளித்த பதில் திருப்தி இல்லை எனக் கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தாா். இதே போல 13 உறுப்பினா்களும் வெளிநடப்பு செய்தனா்.
பதவி விலகுவதாக கடிதம்: 14 திமுக, 3 அதிமுக என மொத்தம் 17 வாா்டு உறுப்பினா்கள் பதவி விலகுவதாக கையொப்பமிட்ட கடிதத்தை நகராட்சி ஆணையா் உமாசங்கரிடம் வழங்கினா். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட ஆணையா், மாவட்ட ஆட்சியா், நகராட்சி இயக்குநருக்கு அனுப்பிவைக்கப்படும். இதன் பின்னரே இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றாா்.