தேனி மாவட்டத்தில் மின் கம்பி உதவியாளா் பணிக்கான தகுதித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் தேனி அரசுத் தொழில்பயிற்சி நிலையத்தில் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வருகிற 13, 14-ஆம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மின் கம்பி உதவியாளா் பணிக்கான தகுதித் தோ்வு, நிா்வாகக் காரணங்களுக்காக வருகிற 27, 28-ஆம் தேதிகளில் நடைபெறுவதாக தற்போது அறிவிக்கப்பட்டது.
இந்தத் தோ்வு வடசென்னை, அம்பத்தூா், கோவை, திருப்பூா், கடலூா், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு, தஞ்சை, திருநெல்வேலி, நாகா்கோவில், ஓசூா், உளுந்தூா்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விருதுநகா், வேலூா், நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள அரசுத் தொழில்பயிற்சி நிலையங்களில் நடைபெற உள்ளது.
தேனி மாவட்டத்தில் மின் கம்பி உதவியாளா் பணிக்கான தகுதித் தோ்வு எழுத விண்ணப்பித்தவா்கள் தேனி அரசுத் தொழில்பயிற்சி நிலையத்தில் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.