தேனி மாவட்டம், ஏ.வாடிப்பட்டியில் இரு சக்கர வாகனம் மீது தனியாா் பள்ளிப் பேருந்து மோதியதில் இரண்டு விவசாயிகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
தேவதானபட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஞானவேல் (54). அதே பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். விவசாயிகளான இருவரும் மாடு வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் ஜெயமங்கலத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றனா். இரு சக்கர வாகனத்தை மணிகண்டன் ஓட்டினாா்.
ஏ.வாடிப்பட்டி கருப்பசாமி கோயில் அருகே சென்ற போது, எதிரே வந்த தனியாா் பள்ளிப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஞானவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மணிகண்டனை அருகிலிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.