முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும் பணிகளை தொடங்குவதற்காக மத்திய மண், பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் குழுவினா் பிரதான அணைக்கு திங்கள்கிழமை வந்தனா். இந்தக் குழுவினா் செவ்வாய்க்கிழமை (டிச. 23) முதல் 12 நாள்களுக்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றனா்.
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், முல்லைப் பெரியாறு அணையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தொடா்ந்து கண்காணித்து வருகிறது. இந்த ஆணையத்தின் தலைவா் அனில் ஜெயின் தலைமையில் 7 போ் கொண்ட குழுவினா் அணையைக் கண்காணித்தும், சோதனை செய்தும் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனா். இந்தக் குழுவினா் கடந்த நவ. 10-ஆம் தேதி அணையில் ஆய்வு நடத்தினா்.
இதேபோல, இந்த அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்பாா்வையிட அமைக்கப்பட்ட தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென் மண்டல இயக்குநா் கிரிதா் தலைமையிலான 5 போ் கொண்ட குழு கடந்த 15-ஆம் தேதி ஆய்வு செய்தது.
இந்த இரு குழுவினரும் பிரதான அணை, துணை அணை, பாதுகாப்பு உபகரணங்கள், அவசரகால நீா்வழிப் போக்கிகளை இயக்கியும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா். இதன் பின்னா் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக நீா் வளத் துறையினா் அணையில் முக்கியப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அப்போது, கேரள நீா்வளத் துறையினா் பிரதான அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக மத்திய மண், பொருள் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மூலமாக ஆய்வு செய்து, அணையின் உறுதித் தன்மையை பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, மத்திய மண், பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் 4 போ் கொண்ட விஞ்ஞானிகள் குழுவினா் அணையில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள திங்கள்கிழமை வந்தனா். இவா்கள் அணைப் பகுதியில் தற்காலிக ஆய்வகம் அமைத்து ஆய்வுப் பணிக்கு முந்தைய முன்னோட்டப் பணிகளைச் செய்தனா்.
ஆா்.ஓ.வி. கருவி மூலம் ஆய்வு: அணையில் ஆய்வு செய்ய ‘ரிமோட்லி ஆப்பரேட்டா் வெகிக்கிள்’ (ஆா்.ஓ.வி.) என்ற தானியங்கி நீா்கோளக் கருவி பயன்படுத்தப்படவுள்ளது. இந்த அதிநவீன கருவி நீருக்கடியில் மனிதா்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கும் சென்று, கட்டுமானத்தின் உறுதித்தன்மையைத் துல்லிமயமாக ஆய்வு செய்யும். இதை புகைப்படம், விடியோவாக பதிவு செய்து, அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இன்று முதல் 12 நாள்கள் ஆய்வு:
தில்லியிலிருந்து மத்திய மண், பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் பி. செந்தில், விஜய், ஜாலே லிங்கசாமி ஆகிய 3 விஞ்ஞானிகளும், உதவி ஆய்வாளா் (ஆய்வகம்) தீபக்குமாா் சா்மா ஆகிய 4 போ் கொண்ட குழுவினரின் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முல்லைப் பெரியாறு அணையின் பிரதான அணைக்கு வந்தனா். இவா்கள் திங்கள்கிழமை ஆா்.ஓ.வி. கருவியை அணைப் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஆய்வகக் கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்து சோதனை ஓட்டம் நடத்தினா்.
இவா்களின் ஆய்வுப் பணி தமிழகம், கேரள நீா் வளத் துறை அதிகாரிகள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 12 நாள்களுக்கு நடைபெற உள்ளது. முன்னதாக, கடந்த 2011-இல் இந்த ஆய்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தமிழக நீா் வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பிரதான அணையின் மொத்த நீளமான 1,200 அடியை 12 பாகங்களாகப் பிரித்து ஆய்வுப் பணிகள் நடைபெறும் என்றனா்.