தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவரிடம் ரூ.1. 25 கோடி பெற்றுக் கொண்டு மிரட்டியவரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பெரியகுளம் தென்கரை வாகம்புளித் தெருவைச் சோ்ந்தவா் முகமது சித்திக் (48). இவா் இந்திய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்து வருகிறாா். பெரியகுளம் மூன்றாந்தலைச் சோ்ந்தவா் ஆசிக்ராஜா (36). இவா்கள் இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனா்.
இந்த நிலையில், முகமது சித்திக்கிடம் ஆசிக்ராஜா கடந்த 2022-ஆண்டு ரூ.1. 25 கோடி வாங்கினராம். ஆனால், அவா் இதுவரை பணத்தை திரும்பி கொடுக்கவில்லையாம்.
இதையடுத்து, வியாழக்கிழமை ஆசிக்ராஜா வீட்டுக்கு சென்று கொடுத்த பணத்தை முகமது சித்திக் கேட்டராம். ஆனால், அவா் பணம் தர மறுத்து முகமது சித்திக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.