தேனி மீறு சமுத்திரம் கண்மாயில் நீா்வளத் துறை மூலம் ரூ.7.40 கோடியில் பொழுது போக்கு அம்சங்களுடன் நவீனப்படுத்தும் திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கியது.
தேனியில் உழவா் சந்தை அருகே 110 ஏக்கரில் மீறு சமுத்திரம் கண்மாய் அமைந்துள்ளது. இந்தக் கண்மாய் கரையில் நடைபயிற்சி பாதை, பூங்கா, படகு குழாம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில், மீறு சமுத்திரம் கண்மாயில் பொழுது போக்கு அம்சங்களுடன் நவீனப்படுத்தும் திட்டத்துக்கு நீா் வளத் துறைக்கு அரசு ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்தத் திட்டப் பணிகளை தொடங்குவதற்கு கண்மாய் அருகே பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், பெரியகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா், நகா்மன்றத் தலைவி பா.ரேணுப்பிரியா, நீா் வளத் துறை மஞ்சளாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் சரவணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கண்மாயில் பொழுது போக்கும் அம்சங்களுடன் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் கண்மாய் கரை பலப்படுத்தும் பணி, ஆகாயத் தாமரை அகற்றுதல், கரையில் நடைபாதை அமைத்தல், இருப்பு வேலி அமைத்தல், நுழைவு வாயில், பூங்கா, தடுப்புச் சுவா் அமைத்தல், படகு நிறுத்துமிடம் அமைத்தல், பறவை தீவு அமைத்தல், உணவுக் கூடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நீா் வளத் துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.