தேனி மாவட்டத்தில் கடந்த ஜன.1 முதல் டிச. 31-ஆம் தேதி வரை 560.65 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சினேஹா ப்ரியா கூறியதாவது: தேனி மாவட்டத்தில் கடந்த ஜன. 1 முதல் டிச. 31-ஆம் தேதி வரை கஞ்சா விற்றதாக 405 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 560.65 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சட்ட விரோத மது விற்பனை குறித்து 1,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 5,600 லிட்டா் அளவுள்ள மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து 516 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 3,402.58 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன விபத்துகளில் 339 போ் உயிரிழந்துள்ளனா். 480 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் ரூ. 1.41 கோடி மதிப்பிலான தங்க நகைகள், பொருள்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் 28 கொலை வழக்குகள், 7 கொள்ளை வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் 35 பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. காணாமல் போன 674 போ் கண்டுபிடிக்கப்பட்டனா்.
மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை, குற்றச் சம்பவங்களைத் தடுப்புதற்கு நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை அதிகப்படுத்தி கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்து துரித நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றச் சம்பவங்களை கண்காணிக்க மாவட்டம் முழுதும் 7,731 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.