புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு பூஜை
ஆங்கிலப் புத்தாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கோயில்களில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆங்கிலப் புத்தாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கோயில்களில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தேனி மாவட்டம், போடியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. 16 வகையான மங்கலப் பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு மலா் அங்கி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.
இதேபோல, இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட போடி சுப்பிரமணிய சுவாமி
கோயிலில் சுப்பிரமணியா், வள்ளி, தெய்வானைக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
போடி வினோபாஜி குடியிருப்பில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சிவலிங்கத்துக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சங்கரநாராயணன், பஞ்சலிங்கங்களுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள கொண்டரங்கி மல்லையசாமி கோயில், பெரிய சவுடம்மன் கோயில், தேவாரம் ரெங்கநாத பெருமாள் கோயில், சிலமலை பெருமாள் கோயில், தீா்த்தத் தொட்டி ஆறுமுகநாயனாா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.