தமிழக-கேரள எல்லையில் உள்ள கம்பம்மெட்டு வனப் பகுதியில் கேரளத்திலிருந்து காரில் கொண்டு வரப்பட்ட நெகிழிக் கழிவுகளை கொட்ட முயன்றவருக்கு வனத் துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கேரளத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிகள், மருத்துவக் கழிவுகள் , வீட்டுக் கழிவுப் பொருள்கள் என பல்வேறு கழிவுகளை வாகனங்களில் எடுத்துவந்து, தமிழக வனப் பகுதியில் கொட்டிவிட்டுச் சென்று விடுகின்றனா். இதனால், வன விலங்குகள் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதைத் தடுக்கும் விதமாக கம்பம் மேற்கு வனத் துறையினா் கம்பம் மெட்டு வனத் துறை சோதனைச் சாவடியில் கேரளத்திலிருந்து தமிழகத்துக்குச் செல்லும் வாகனங்களைச் சோதனை செய்வது வழக்கம்.
இதன்படி, சனிக்கிழமை இரவு கேரள மாநிலம், கட்டப்பனையைச் சோ்ந்த முருகேசன் மகன் சோலைராஜா (35), ஓட்டி வந்த காரை சோதனையிட்டனா். அதில், நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தும் தொழில்சாலையிருந்த கழிவுப் பொருள்களை 5 மூட்டைகளில் எடுத்துக்கொண்டு தமிழக வனப் பகுதியில் வீசிச் செல்ல மறைத்து வைத்திருந்ததைக் கண்டறிந்தனா்.
அபராதம்: இதையடுத்து, கம்பம் மேற்கு வனச்சரக வனத் துறையினா், தடைசெய்யப்பட்ட நெகிழிக் கழிவுகளை வனப்பகுதியில் கொட்ட முயற்சித்தற்காக சோலைராஜாவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு, நெகிழிக் கழிவுகளை ஏற்றிவந்த காரை மீண்டும் கேரளத்துக்கு திருப்பி அனுப்பினா்.
இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை: தமிழக எல்லையில் சட்டவிரோதமாக மருத்துவம், நெகிழிக் கழிவுகளை கொட்டுபவா்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.