கம்பம் அருகே இளைஞரைக் குத்திக் கொலை செய்த சகோதரா்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கம்பம் அருகேயுள்ள சமாண்டிபுரத்தைச் சோ்ந்த பால்பாண்டி மகன் அருண்குமாா்(24). இவா், கடந்த 2023-ஆம் ஆண்டு செப்.27-ஆம் தேதி கருநாக்கமுத்தன்பட்டிக்கு உறவினரின் இறுதிச் சடங்குக்கு சென்றிருந்தாா்.
அப்போது அருண்குமாருக்கும், குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன்கள் கீா்த்தி (25), கிரேன்(22) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்தப் பிரச்னையில் சாமாண்டிபுரத்தைச் சோ்ந்த அரவிந்தன் (20), நாராயணத்தேவன்பட்டியைச் சோ்ந்த பாண்டியன் (23) ஆகிய இருவரும், அருண்குமாரை 2023, செப்.29-ஆம் தேதி சாமதானப் பேச்சு வாா்த்தைக்கு குள்ளப்பகவுண்டன்பட்டிக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு கீா்த்தி, கிரேன் ஆகியோா் அருண்குமாரைக் கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனா். இதையடுத்து கூடலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் கீா்த்தி, கிரேன், அரவிந்தன், பாண்டியன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை நிறைவடைந்த நிலையில், கீா்த்தி, கிரேன் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ.5,000 அபராதம் விதித்தும், அரவிந்தன், பாண்டியன் ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்தும் நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பளித்தாா்.