தேனி மாவட்டம், கம்பத்தில் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
கம்பம் பள்ளத் தாக்குப் பகுதியில் நெல், வாழை, தென்னை, திராட்சை ஆகியவை முதன்மை விவசாயமாக மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, தென்னை விவசாயம் கம்பம், கூடலூா், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம், சின்னமனூா், வருஷநாடு என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உறிக்கப்படும் தேங்காய்கள் மதுரை, திண்டுக்கல், விருதுநகா் என பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தவிர, காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தேங்காய் எண்ணெய் எடுக்க கொப்பரையாகவும் அனுப்பப்படுகின்றன.
முக்கியமாக கோடை காலங்களில் சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்து இளநீராக வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். அதே போல, தேங்காய் மட்டைகளிலிருந்து தொழிற்சாலைகள் மூலமாக நாா் தயாரிக்கப்படுகிறது. எனவே, தென்னை மரத்திலிருக்கும் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாக இருப்பதால் கம்பம் பள்ளத் தாக்கு உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.
வாடல் நோய் தாக்குதல்: இந்த நிலையில், கம்பத்தில் 18- ஆம் கால்வாய் செல்லும் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை மரங்களில் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால், அந்த மரங்களின் கிளைகள் (ஓலைகள்) பழுப்பு மஞ்சள் நிறமாகி தொங்குகின்றன. மேலும், விளைச்சலும் குறைந்து விட்டது. மரத்தில் அதிபட்சமாக 10 முதல் 20 வரை சிறிய அளவில் காய்கள் காய்க்கின்றன. தற்போது, தென்னை மரங்களில் வாடல் நோய் அடுத்தடுத்து பரவுகிறது. இதை கட்டுப்படுத்த வழியின்றி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
எனவே, கம்பம் பகுதி வேளாண் துறையினா் கள ஆய்வு செய்து வாடல் நோய் தாக்குதல் குறித்து தென்னை விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதுடன், நோயை கட்டுப்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.