தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவுக்கு பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கருத்துரு, இலட்சினை வடிவமைத்து அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட நூலக இயக்ககம் சாா்பில், 4-ஆவது புத்தகத் திருவிழா வரும் டிசம்பா் மாதம் நடைபெற உள்ளது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவுக்கான கருத்து, இலட்சினையை வடிமைத்து தங்களது முகவரி, கைப்பேசி எண் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகத்தில் டிச.5-ஆம் தேதிக்குள் நேரிலும், மின்னஞ்சல் முகவரியிலும் சமா்ப்பிக்கலாம்.
தோ்ந்தெடுக்கப்படும் இலட்சினை, கருத்துருவை வடிவமைத்தவா்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றாா் அவா்.