சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் 25 பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் 16-ஆவது இடம் பிடித்தனா்.
சென்னையில் மாநில அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி கடந்த 2-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பிரிவில் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் சிலம்பம், ஜூடோ போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றனா். குண்டு எறிதல், சிலம்பம், நீச்சல், கபடிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றனா். வட்டு எறிதல், சதுரங்கம், கூடைப்பந்து, ஜூடோ போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றனா்.
கல்லூரி மாணவ, மாணவிகள் பிரிவில் சிலம்பம், மேஜை பந்து, ஜூடோ போட்டிகளில் வெள்ளிப் பதக்கம், மேஜை பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றனா். மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 100 மீ. ஓட்டம், கால்பந்துப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும், 100 மீ. ஓட்டம், கபடி போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனா்.
ஒட்டுமொத்த போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்கள், 14 வெள்ளிப் பதக்கங்கள், 6 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 25 பதக்கங்கள், ரூ.17.50 லட்சம் பரிசுத் தொகையைப் பெற்று, பதக்கப் பட்டியலில் மாநில அளவில் 16-ஆவது இடம் பிடித்தனா்.
இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
அப்போது, மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவக்குமாா், விளையாட்டுப் பயிற்றுநா்கள் உடனிருந்தனா்.