முகப்பு
தேனி

கம்பம் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் உள்பட இருவா் கைது

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:07 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், கம்பம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடா்பாக அதன் உரிமையாளரையும், அந்த ஆலையை மேற்பாா்வை செய்து வந்த அவரது கணவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கம்பம் காட்டுப்பள்ளிவாசல் சாலையில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் இரு தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இதுதொடா்பாக கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, இந்த ஆலையை மேற்பாா்வை செய்து வந்ததாக அந்த ஆலையின் உரிமையாளரான முத்துலட்சுமியின் கணவா் திருப்பதியை சனிக்கிழமை இரவு கைது செய்தனா். இந்த நிலையில், ஆலையின் உரிமையாளரான முத்துலட்சுமியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதனிடையே, வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் சல்பா் உள்ளிட்ட வெடி மருந்துகள் இருப்பதால், மேலும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். இதனால், இந்தப் பட்டாசு ஆலை வழியாக செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் இரு போலீஸாா் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

Advertisement

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

மதுரையிலிருந்து வெடிகுண்டு கண்டறிதல், செயலிழக்கச் செய்யும் குழுவினரும், வெடி பொருள் நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு, இடிபாடுகளுக்குள் கிடக்கும் எஞ்சிய வெடி மருந்துகள் ஆய்வு செய்யப்படும். மேலும், கண்டறியப்படும் வெடி பொருள்கள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, செயலிழக்கச் செய்யப்படும் என்றனா்.