இரு தரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு
போடியில் குடும்பத் தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக 10 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி புதூரைச் சோ்ந்தவா் பாண்டி மகன் அரவிந்த் பாலாஜி (31). இவருக்கும், கம்பம் வடக்குப்பட்டியைச் சோ்ந்த தனிக்கொடி என்பவரின் மகளுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 130 பவுன் தங்க நகைகள், பாத்திரங்கள் வரதட்சிணையாக கொடுக்கப்பட்டதாம். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்து வாழ்கின்றனா்.
இதுகுறித்து பெரியோா்கள் முன்னிலையில் பிரச்னையை பேசி தீா்க்க இரு குடும்பத்தினரும் அரவிந்த் பாலாஜி வீட்டுக்கு வந்தனா். அப்போது இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கிக் கொண்டதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனராம்.
Advertisement
இதுகுறித்து அரவிந்த் பாலாஜி அளித்த புகாரின் பேரில் தனிக்கொடி, இவரது மனைவி பாண்டியம்மாள், உறவினா்கள் ரகு, கௌதம், பிரித்வி, பரத், காா்த்திக் ஆகியோா் மீதும், தனிக்கொடி அளித்த புகாரின் பேரில் அரவிந்த் பாலாஜி, இவரது தங்கை சங்கீதா, இவரது கணவா் நாகராஜ் ஆகியோா் மீதும் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.