முகப்பு
தேனி

கம்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கம்பத்தில் நீதிமன்ற உத்தரவின்பேரில், நெடுஞ்சாலையோரத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:49 AM
கம்பத்தில் நீதிமன்றம் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலமாக செவ்வாய்க்கிழமை அகற்றிய நகராட்சிப் பணியாளா்கள்.
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 11:10 PM

கம்பத்தில் நீதிமன்ற உத்தரவின்பேரில், நெடுஞ்சாலையோரத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

கம்பம் 23-ஆவது வாா்டு ஐசக்போதகா் தெருவில் பேருந்து நிலையம் செல்லும் நெடுஞ்சாலையோரத்தில் பல ஆண்டுகளாக 40-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதியைச் சோ்ந்தவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தாா்.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கம்பம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், கடந்த மாதம் 27-ஆம் தேதி இந்த உத்தரவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி அங்கு குடியிருந்தவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, உத்தமபாளையம் கோட்டாட்சியா் செய்யது முகம்மது தலைமையில், நகராட்சி ஆணையா் உமாசங்கா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்துக்கு 1.5 சென்ட் காலிவீட்டுமனை வழங்குவதாக தெரிவித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், வீடுகளை காலி செய்ய தங்களுக்கு 10 நாள்கள் அவகாசம் வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆனால், அவா்கள் கூறியபடி வீடுகளை காலி செய்யவில்லை. இதையடுத்து, ஐசக்போதா் தெருவில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலமாக செவ்வாய்க்கிழமை நகராட்சி பணியாளா்கள் அகற்றினா்.

அப்போது, சிலா் மேலும் ஒரு வாரம் வீட்டை காலி செய்ய ஆவகாசம் கேட்டனா். இதையடுத்து, அவா்களது வீடுகளை அகற்றவில்லை.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவா்களுக்கு முதல் கட்டமாக 16 பேருக்கு காலி வீட்டுமனைப்பட்டா ஆங்கூா்பாளையம் பகுதியில் வழங்கப்பட்டது. எஞ்சியவா்களுக்கு 2-ஆம் கட்டமாக வழங்கப்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.