முகப்பு
தேனி

கம்பம்மெட்டு மலைச் சாலையில் போக்குவரத்து நெரிசல்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 2:26 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 10:45 PM

தேனி மாவட்டத்தில், தமிழகம் - கேரளத்தை இணைக்கும் முக்கிய சாலையான கம்பம்மெட்டு மலைச் சாலை குண்டும் குழியுமாக மாறியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

கம்பம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் 8 கி.மீ. தொலைவுக்கு மலைச் சாலை அமைந்துள்ளது. இது ,தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாகும். தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளா் நாள்தோறும் ஜீப்பில் சென்று வருகின்றனா். இதே போல, இரு மாநில மக்கள் செல்லும் வகையில் அரசு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள் என 24 மணி நேரமும் இந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து உள்ளது.

தவிர, இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழா்கள் மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தும் இந்தச் சாலையானது, கடந்த சில ஆண்டுகளாகக் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. இந்தச் சாலையிலுள்ள 18 கொண்டை ஊசி வளைவுகளில் செல்லும் கனரக வாகனங்கள் இந்த பள்ளங்களில் செல்லும்போது பழுதாகி சாலையின் நடுவே நின்றுவிடுவதால் அவற்றை சரிசெய்ய பல நாள்களாகின்றன. நாள்தோறும் இதே நிலை ஏற்படுவதால் சமீப காலமாக கம்பம்மெட்டு மலைச் சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

Advertisement

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

8 கி.மீ. தொலைவுள்ள கம்பம்மெட்டு மலைச் சாலையைச் சீரமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், நெடுஞ்சாலைத் துறை- வனத் துறைக்கு இடையே சாலையைச் சீரமைப்பதில் சட்டப் பிரச்னை இருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே, தேனி மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலமாக கம்பம்மெட்டு மலைச் சாலையைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.