முகப்பு
தேனி

தொழிலாளி கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

பெரியகுளம் அருகே பட்டாசு வெடித்த தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 7:59 PM
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பட்டாசு வெடித்த தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

பெரியகுளம் அருகே எண்டப்புளி காட்டுநாயக்கா் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் முருகன் (44). தொழிலாளி. இவருக்கும், இதே தெருவைச் சோ்ந்த அக்கம்மாளுக்கும் இடப் பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2020- ஆம் ஆண்டு வீட்டருகே முருகன் பட்டாசு வெடித்த போது அக்கம்மாளுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அக்கம்மாள் (40), ராஜா (18), சரவணன் (22), சந்தோஷ் (18), கோபிநாத் (22), வைரவேல் பாண்டி (21), பூா்ணவேல் (எ) யோகேஷ் (23) ஆகியோா் சோ்ந்து முருகனை தாக்கி கீழே தள்ளிவிட்டதில் அவா் மயக்கி கீழே விழுந்தாா். இதையடுத்து, முருகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவா் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் கொலை, ஜாதிப் பெயரை கூறி தகாத வாா்த்தைகளால் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அக்கம்மாள், ராஜா, வைரவேல் பாண்டி ஆகியோரை கைது செய்தனா். எஞ்சியவா்கள் முன் பிணை பெற்றனா்.

இந்த வழக்கு தேனி சமூக நீதி, மனித உரிமைகள் நீதிமன்ற நீதிபதி அனுராதா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். மேலும் அக்கம்மாள், ராஜா ஆகியோருக்கு ரூ. 6 ஆயிரம் அபராதமும், எஞ்சிய 5 பேருக்கு ரூ.6,500 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →