தொழிலாளி கொலை வழக்கு: 7 பேருக்கு ஆயுள் சிறை
பெரியகுளத்தில் இடத் தகராறில் கூலித் தொழிலாளியை தாக்கிக் கொலை செய்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட பெண் உள்பட 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பெரியகுளத்தில் இடத் தகராறில் கூலித் தொழிலாளியை தாக்கிக் கொலை செய்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட பெண் உள்பட 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் எண்டப்புளி காட்டுநாயக்கா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (44). கூலித் தொழிலாளி. இதே பகுதியைச் சோ்ந்தவா் அக்கம்மாள் (40). இவருக்கும், முருகனுக்கும் இடையே இடம் தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசுகள் வெடித்ததில் இவா்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அக்கம்மாள், ராஜா (18), சரவணன் (22), சந்தோஷ் (18), கோபிநாத் (22), வைரவேல் பாண்டி (21), யோகேஷ் (23) ஆகிய 7 பேரும் சோ்ந்து முருகனைத் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் அக்கம்மாள் உள்பட 7 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு தேனி சமூக நீதி, மனித உரிமைகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி அனுராதா குற்றஞ்சாட்டப்பட்ட அக்கம்மாள், ராஜா, சரவணன், சந்தோஷ், கோபிநாத், வைரவேல் பாண்டி, யோகேஷ் ஆகிய 7 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். மேலும், அக்கம்மாள், ராஜா ஆகியோருக்கு தலா ரூ. 6 ஆயிரமும், சரவணன், யோகேஷ் ஆகியோருக்கு தலா ரூ.6,500 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கை முறையாக விசாரணை செய்த போலீஸாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹா பிரியா பாராட்டு தெரிவித்தாா்.