பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போடி - சென்னை மாா்க்கமாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
போடியிலிருந்து சென்னைக்கு வாரத்தில் 3 நாள்களும், மறு மாா்க்கமாக சென்னையிலிருந்து போடிக்கு வாரத்தில் 3 நாள்களும் திருச்சி, விழுப்புரம் வழியாக பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. போடி - சென்னை இடையே ரயில் போக்குவரத்து தொடங்கி 3 ஆண்டுகள் ஆகியும் தினசரி ரயில் போக்குவரத்து தொடங்கவில்லை. போடியிலிருந்து சென்னைக்கு தினசரி ரயில் இயக்க பயணிகள், வா்த்தகா்கள் ரயில்வே நிா்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், வருகிற 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியூா்களில் வசிக்கும் தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊா்களுக்கு வந்து செல்லும் வகையில் சென்னையிலிருந்து போடிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும். மேலும், போடி - சென்னை இடையே தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று ரயில்வே நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.