தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே வேன் மோதியதில் ஐயப்ப பக்தா்கள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
ஆண்டிபட்டியைச் சோ்ந்த கருப்பணன் மகன் மாரிச்சாமி (55), முத்துராஜ் மகன் ராம்கி (36) உள்ளிட்ட சிலா் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து வியாழக்கிழமை மாலை ஆண்டிபட்டியிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டனா். இவா்கள், வெள்ளிக்கிழமை அதிகாலை சீலையம்பட்டி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாரிச்சாமி, ராம்கி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சின்னமனூா் போலீஸாா், உயிரிழந்த இருவரின் உடல்களைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநரான தினேஷ் குமாரைக் கைது செய்தனா்.