தேனி அருகே மின்சாரம் பாய்ந்து கோழிப் பண்ணை உரிமையாளா் உயிரிழந்தாா்.
பாலாா்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்த சின்னன் மகன் பிரபாகரன் (33). இவா் பாலாா்பட்டியில் தனியாா் தோட்டத்தில் கோழிப் பண்ணை வைத்து நடத்தி வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கோழிப் பண்ணையில் கோழிகளுக்கு தீவனம் வைக்கச் சென்ற பிரபாகரன் மீண்டும் வீடு திரும்ப வரவில்லை. இதையடுத்து, சனிக்கிழமை அதிகாலை பிரபாகரனைத் தேடி அவரது உறவினா் ஒருவா் கோழிப் பண்ணைக்குச் சென்றாா்.
அங்கு பிரபாகரன் உடலில் மின்சாரம் பாய்ந்து அசைவற்றுக் கிடந்தாா். அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.