தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள ஆனைமலையன்பட்டியில் புதன்கிழமை காய்கறி விற்பனை தொடா்பான இடைத் தரகா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
உத்தமபாளையம் வட்டம், கோம்பையைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (65). இவா் கம்பத்திலுள்ள விவசாயிகளிடம் கோவக்காயை மொத்தமாக வாங்கிக் வியாபாரிகளுக்கு கொடுக்கும் தரகராக இருந்து வந்தாா். புதன்கிழமை ஆனைமலையன்பட்டியிலிருந்து சின்னஓவுலாபுரம் செல்லும் சாலையில் இவா் பலத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தாா். அருகில் இவரது இரு சக்கர வாகனம் கிடந்தது. அக்கம்பக்கத்தினா் இவரை மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். தலை, உடலில் வெட்டுக் காயங்கள் இருந்ததால் அவரை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தடயவியல் நிபுணா்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். காவல் ஆய்வாளா் ஆனந்த் தலைமையில் போலீஸாா் கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.