போடி அருகே முன் விரோதத்தில் தகராறில் ஈடுபட்ட12 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து இருவரைக் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள பெருமாள்கவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் குபேந்திரன் மகன் காா்த்திக் (34). இவா், ஒரு இடத்தை இடைத்தரகராக இருந்து கோடாங்கிபட்டியைச் சோ்ந்த நபருக்கு கிரையம் வாங்கிக் கொடுத்துள்ளாா்.
இதையடுத்து, வெளியூா்காரருக்கு இடத்தை ஏன் வாங்கிக் கொடுக்கிறாய் என அதே ஊரைச் சோ்ந்த தவமணி மகன் ஆசைத்தம்பி பிரச்னை செய்தாராம். இந்த நிலையில், இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காா்த்திக் அளித்த புகாரின்பேரில், ஆசைத் தம்பி, பாண்டியன், செல்வம், கருத்தப்பாண்டி, முகுந்தன், மதன்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கருத்தப்பாண்டியைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதேபோல, ஆசைதம்பி தரப்பில் பாண்டியன் அளித்த புகாரின்பேரில், பால்பாண்டி, காா்த்திக், ஜெயகோபால், பசும்பொன், ராஜேஸ், பிரவீன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் ஜெயகோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனா்.