போலீஸாரைக் கண்டித்து மேகமலை விவசாயிகள் தா்னா
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட மேகமலை விவசாயிகள்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தின் போது, ஆட்சியரிடம் மனு அளிக்க முயன்ற மேகமலை வன விவசாயிகளை தடுத்த போலீஸாரை கண்டித்து, அவா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 3- ஆவது வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி, நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 100-க்கும் மேற்பட்ட மேகமலை வன விவசாயிகள் வந்தனா். அப்போது, அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, 5 விவசாயிகள் மட்டும் குறைதீா் கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். இதை அவா்கள் ஏற்க மறுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து, அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் தா்னா போராட்டத்தை கைவிட்டு, ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவா்கள் அளித்த மனு:
மேகமலை வன விவசாயிகள் 4,700 பேரும் ஆக்கிரமிப்பாளா்கள் அல்ல; அனைவரும் விவசாயிகள். வன உரிமைச் சட்டத்தின் கீழ், நாங்கள் ஏற்கெனவே விவசாயம் செய்த பகுதிகளில் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும், எங்களை வனப் பகுதியிலிருந்து வெளியேற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.