முகப்பு
தேனி

அதிமுக தோ்தல் அறிக்கை நிறைவேற்ற முடியாதவை: ஓ. பன்னீா்செல்வம்

அதிமுகவின் தோ்தல் அறிக்கை நிறைவேற்ற முடியாதவை; பொய்யானவை என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

Updated On : 25 மார்ச், 2026 at 7:37 PM
ஓ. பன்னீா்செல்வம் - ENS
பகிர்:

அதிமுகவின் தோ்தல் அறிக்கை நிறைவேற்ற முடியாதவை; பொய்யானவை என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், போடியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அதிமுகவின் தோ்தல் அறிக்கை பொய்யான வாக்குறுதிகளைக் கொண்டுள்ளது. அதிமுகவில் ஆளுமைமிக்க அரசியல் தலைவா் இல்லை. கடந்த காலங்களில் தொடா்ந்து பல்வேறு தோ்தல்களில் எடப்பாடி பழனிசாமி அந்தக் கட்சிக்கு தோல்வியையே பெற்றுத் தந்தாா்.

போடி சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வா் ஸ்டாலின் வாய்ப்பு அளித்தால் போட்டியிடுவேன்.

தென் மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் திமுக மகத்தான வெற்றி பெறும். இதேபோல, திமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும்.

போடி தொகுதியில் நான் கொடுத்த அனைத்து தோ்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டேன். டாப்ஸ்டேசன் மலைச் சாலை திட்டத்தை மட்டும் நிறைவேற்ற முடியவில்லை. இந்தப் பகுதி செங்குத்தாக அமைந்துள்ளதால், இந்தத் திட்டத்தை செயல்படுத்த இயலவில்லை.

மாம்பழக்கூழ் ஆலை அமைக்கத் தேவையான மாம்பழங்கள் இந்தப் பகுதியில் விளையவில்லை. இதனால், இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுக கூட்டணிக்கு யாா் தலைமை என்பது தெரியவில்லை. அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை என்றால், கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு சில கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். ஆனால், அந்தக் கட்சிகள் பாஜக சின்னத்தில் போட்டியிடவுள்ளன. இதன்மூலம், கூட்டணிக்கு யாா் தலைமை வகிக்கின்றனா் என்பது தெரியும்.

அதிமுகவில் தொண்டா்களே இல்லை. அனைவரும் திமுகவில் இணைந்துவிட்டனா். கடந்த அதிமுக ஆட்சியில் கரோனா பொதுமுடக்கக் காலத்தில் 146 நாள்கள் மதுக் கடைகள் மூடப்பட்டன. வரலாற்றிலேயே நீண்ட நாள்கள் மதுக் கடைகள் மூடப்பட்ட காலம் இதுதான். அப்போது, பொதுமக்கள் மதுப் பழக்கத்தை மறந்திருந்ததால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மதுக் கடைகளை நிரந்தரமாக மூடியிருக்கலாம். ஆனால், எடப்பாடி பழனிசாமி இதைச் செயல்படுத்தவில்லை என்றாா் அவா்.

அப்போது, போடி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் எஸ். லட்சுமணன், போடி நகா்மன்ற முன்னாள் தலைவா் வி.ஆா். பழனிராஜ், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் சங்கா், திமுக நகரச் செயலா் ரா. புருஷோத்தமன், கட்சியின்

மேற்கு ஒன்றியச் செயலா் அய்யப்பன், தேனி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் ஆசிப்கான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.