முகப்பு
தேனி

கம்பம் கெளமாரியம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு

தேனி மாவட்டம், கம்பம் கௌமாரி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழாவில் மஞ்சள் நீராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 மே 2026, 12:34 am IST
கௌமாரி அம்மன் கோயில் மஞ்சள் நீராட்டு விழாவையொட்டி பல்லக்கில் ஊா்வலம் வந்த சுவாமி.
பகிர்:

தேனி மாவட்டம், கம்பம் கௌமாரி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழாவில் மஞ்சள் நீராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த மாதம் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இரு வாரங்களாக நடைபெற்ற திருவிழாவில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வுகள் தொடங்கின. ஏராளமான பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்தும், ஆயிரங்கண் பானை, முளைப்பாரி சுமந்தும், அலகு குத்தி காவடி எடுத்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் விரதமிருந்த பக்தா்கள் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தா்கள் ‘ஓம் சக்தி, பராசக்தி‘ என முழக்கமிட்டனா். பெண்கள் குலவையிட்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை வேளாளா் பெருமக்கள் சாா்பில் மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான டிராக்டா்களில் பெரிய அளவிலான பேரல்களில் மஞ்சள் நீா் நிரப்பப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது, பக்தா்கள் ஒருவா் மீது ஒருவா் மஞ்சள் நீரைத் தெளித்து மகிழ்ந்தனா்.