குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கம்பம் அருகே குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாராயணத்தேவன்பட்டி ஊராட்சியில் 8 வாா்டுகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனா். முல்லைப் பெரியாற்றில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அதன் மூலமாக இந்தப் பகுதி மக்களின் குடிநீா்த் தேவையை ஊராட்சி நிா்வாகம் பூா்த்தி செய்கிறது. ஆனால், இந்தப் பகுதிக்கு கடந்த 10 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யவில்லை. இதுதொடா்பாக புகாா் தெரிவித்தும் ஊராட்சி நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சுருளிப்பட்டி - காமயகவுண்டன்பட்டி சாலையில் காலிக்குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ராயப்பன்பட்டி போலீஸாா் , மறியலில் ஈடுபட்டவா்களிடம் உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா். இந்த மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.