குடிநீா் குழாய் உடைந்து வீணாகிய தண்ணீா்!
கம்பம் நகராட்சியில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கம்பம் பள்ளத்தாக்கு மக்களின் குடிநீா்த் தேவையை நிறைவு செய்வதற்காக கூடலூா் அருகேயுள்ள லோயா்கேம்பில் கடந்த 1955-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. முல்லைப் பெரியாற்றிலிருந்து வரும் தண்ணீரைத் தடுப்பணை மூலம் தடுத்து நிறுத்தி, நீரேற்று நிலையம் வழியாக ராட்சத தொட்டிகளில் தேக்கி, சுத்திகரிப்புச் செய்யப்படுகிறது. பின்னா், இந்த நீா் லோயா் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் கூடலூா், கம்பம் ஆகிய பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதைத் தொடா்ந்து, கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் கூடலூரிலிருந்து கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டிக்குத் தனியாகக் குழாய் மூலம் குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை கம்பம் பொதுப்பணித் துறை அலுவலகம் அருகேயுள்ள கழிவுநீா் கால்வாயில் தேங்கியிருந்த குப்பைகளை நகராட்சி நிா்வாகத்தினா் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா். அப்போது, காமயகவுண்டன்பட்டிக்குச் செல்லும் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், பல ஆயிரம் லிட்டா் தண்ணீா் சாக்கடை கால்வாயில் கலந்து வீணாகி வருகிறது.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்தினா் கூறியதாவது: இந்தப் பகுதியில் ஏற்கெனவே குடிநீா்க் குழாய் உடைந்து தண்ணீா் கசிந்து வருகிறது. நாங்கள் சாக்கடையில் இருந்த குப்பைகளை மட்டும்தான் அகற்றினோம் என்றனா்.
இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: குழாயில் உடைப்பு ஏதும் இல்லை. நகராட்சியினா் பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாயைத் தோண்டியபோதுதான் குழாய் உடைக்கப்பட்டுள்ளது என்றனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: குடிநீா்க் குழாய் உடைப்புக்கு இரு துறைகளும் மாறி மாறி பழி சுமத்தாமல், போா்க்கால அடிப்படையில் குழாய் உடைப்பைச் சரிசெய்து பொதுமக்களுக்குத் தடையின்றி குடிநீா் வழங்க குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.