மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.13.07 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்
இக் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது 15 நாள்களுக்குள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பரிசீலனை செய்வதில் அலுவலர்கள் தாமதம் செய்யவே
விருதுநகர் மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.13.07 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசியதாவது:
இக் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது 15 நாள்களுக்குள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பரிசீலனை செய்வதில் அலுவலர்கள் தாமதம் செய்யவே கூடாது. அதேபோல், குறிப்பிட்ட நாளில் நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கையும் எடுக்கப்படும்.மேலும், முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும். மனுக்களின் தன்மையை அறி்ந்து கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்து விளக்கத்தை அனுப்பி வைக்க வேண்டும். பரிசீலனை செய்த மனுக்களின் விவரத்தை பதிவேடுகளில் பதிவு செய்து வர வேண்டும் என சம்பந்தப்பட்ட ஒவ்வொரு துறை அலுவலர்களையும் ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
Advertisement
அதற்கு முன்னதாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் பிளஸ்2 தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடங்களை பெற்ற 5 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.6 ஆயிரமும், 2-ம் இடம் பெற்ற 4 பேருக்கு 4 ஆயிரமும், 3-ம் இடம் பெற்ற 4 பேருக்கு தலா ரூ.3 ஆயிரத்திற்கான காசோலைகளையும், 25 பேருக்கு தலா ரூ.2890 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், 12 பேருக்கு தலா ரூ.2569 மதிப்பில் விலையில்லா தேய்ப்பு பெட்டிகளையும், மகளிர் திட்டம் சார்பில் ஊராட்சி அளவிலான 12 மகளிர் கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் என மொத்தம் 62 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில், மகளிர் திட்ட அலுவலர் என்.பிச்சை, திட்ட அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) அருமைநாயகம் வரகுணராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் வசந்தி, தனித் துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) மேரிபாய், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.