முகப்பு
விருதுநகர்

அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டுமென தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மாவட்ட தலைவர் கிருஷ்ண

Updated On : 9 ஜூன், 2014 at 12:07 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:02 AM

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டுமென தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதய நோய் சம்பந்தமான நோயாளிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இதயநோய் பிரிவு மருத்துவர் இல்லை. இந்த பிரிவில் இருந்த ஒரு மருத்துவர் விருதுநகருக்கும் மற்றொரு மருத்துவர் மாற்றுப் பணியிலும் உள்ளனர். இதனால் இதய நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் 5 மயக்கவியல் மருத்துவர்கள் இருந்தும் அறுவை சிகிச்சை செய்ய ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். நோயாளிகள் நாள் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. கண் மருத்துவ பிரிவுக்கு தனியாக படுக்கை வசதியுடன் ஆபரேஷன் தியேட்டர் இருந்தும் கண் மருத்துவர் இல்லை. வாரத்துக்கு 2 நாள்கள் மட்டும் வந்து செல்கின்றனர். இதனால் கண் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மருத்துவர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். மேலும், பொது மருத்துவப் பிரிவில் காலை 7.30 மணிக்கு மருத்துவர் வந்தால் தினக்கூலிக்கு செல்லும் பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய சிகிச்சையை பெற்று செல்வார்கள். 8 மணிக்கு மேல் மருத்துவர் வருவதால் சிகிச்சை பெற முடியவில்லை. மேலும் அறுவை சிகிச்சை, இதய சிகிச்சை மற்றும் கண் பிரிவுக்கு மருத்துவர்கள் நியமிக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.