பட்டா மாறுதல் உத்தரவு வழங்கும் முறையில், ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வழங்கிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்க, கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், வட்டாட்சியர் பொன்ராமர் தலைமையில் நடைபெற்றது.
காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பட்டா மாறுதல் கேட்டு வரும் விண்ணப்பங்களில், கிரையம் கொடுத்தவர், கிரையம் பெற்றவர்களின் மொபைல் எண் அவசியம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெறப்படும் பட்டா மாறுதல் மனுக்கள், சார்பதிவாளர் அலுவலக பணியாளரால், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்கப்படும். அதிலும் சம்மந்தப்பட்டவர்களின் மொபைல் எண் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் பட்டா மாறுதல் மனுக்கள், சரிபார்க்கப்பட்டு, தனித்தனியாக பிரித்து, ஒவ்வொரு மனுவுக்கும் பகிர்மான பதிவேட்டு எண் வழங்கப்படும். விண்ணப்பங்களில் உரிய இணைப்புகள் இல்லாத பட்சத்தில், அந்த ஆவணங்களுடன் மீண்டும் மனு செய்ய கடிதம் அனுப்பப்படும்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் கிராம கணக்குடன் ஆஜராகும் வி.ஏ.ஓ.விடம், ஆர்.டி.ஆர்., எஸ்.டி.ஆர்., மனுக்கள் அளிக்கும்போது, அதற்கான அறிக்கை பெறப்பட்டு, உட்பிரவு ஒரு மாதத்துக்குள்ளும், முழுப்புலம் 15 நாள்களுக்குள்ளும் உத்தரவு வழங்கப்படும். உட்பிரிவு செய்ய சர்வேயர் வரும் நாள், நேரம் குறித்து, மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல்கள் அனுப்பப்படும் என, வட்டாட்சியர் பொன்ராமர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர்கள், 36 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.