திருச்சுழி பகுதியில் பருத்தியை தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்மை அறிவியல் நிலைய அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
திருச்சுழி, நரிக்குடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது 20 முதல் 25 நாள் பயிராக உள்ள நிலையில், இப்பருவத்தில் சாறு உறுஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, இலைப்பேன், அசுவினி மற்றும் வெள்ளை ஈயின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இப்பூச்சிகளின் தாக்குதலினால் செடிகள் மஞ்சள் நிறமடைந்து பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும். எனவே, தாக்குதல் அதிகமிருந்தால் செடிகள் வாடி கருகிவிடும் நிலை ஏற்படும்.
இது சம்பந்தமாக கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பால்பாண்டி மற்றும் பயிர் பாதுகாப்பு துறை தொழில்நுட்ப வல்லுனர் ராஜேந்திரன் பூச்சிகளை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அதன்படி, பருத்தி விதைகளை ஊடுருவி பாயும் பூச்சி கொல்லியான இமிடாகுளோபிரிட் மருந்தினை 1 கிலோ விதைக்கு 1 மி.லி. என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி
செய்து விதைக்க வேண்டும்.
பயிர் முளைத்த 20 முதல் 25 நாளில் இமிடாகுளோபிரிட் மருந்து ஏக்கருக்கு 40 மிலி என்ற அளவிலும் அல்லது ரோகார் மருந்து ஏக்கருக்கு 300 மிலி என்ற அளவிலும் பயிரில் தெளிக்க வேண்டும்.
குருணை மருந்துகளான பியூரடான் அல்லது போரேட் மருந்துகளை ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் பங்கு மணலுடன் கலந்து மண்ணில் இடவேண்டும்.
தாவர பூச்சிகொல்லிகளான வேப்பஎண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதம் என்ற அளவிலும்
பயிரில் தெளிக்க வேண்டும்.
ஊடுபயிராக தட்டை பயிறு, சூரியகாந்தி மற்றும் மக்காசோளம் பயிரிட்டால் நன்மை
செய்யும் பூச்சியான பொறிவண்டின் எண்ணிக்கை பெருகி அசுவினி, தத்துபூச்சி மற்றும் இலைபேனின் தாக்குதலை குறைக்கிறது.
மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி ஏக்கருக்கு 10 என்ற அளவில் வைத்து வெள்ளை ஈயின் தாக்குதலை குறைக்கலாம் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.