விருதுநகர்

ஆத்துமேடு ரயில்வே சுரங்கப் பாதை பணியால் குடிநீர் குழாய்கள் சேதம்: 2 மாதங்களாக தண்ணீர் வராததால் பொதுமக்கள் அவதி

DIN

விருதுநகர் சிவந்திபுரம் ஆத்துமேடு ரயில்வே சுரங்கப்பாதைப் பணியின்போது பிரதான குழாய்கள் சேதமடைந்ததால் கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
விருதுநகர் காமராஜர் புறவழிச்சாலையின் நடுவில் ஏற்கெனவே, ரயில்வே கடவுப் பாதை இருந்து வந்தது. இப்பாதையை அடிக்கடி மூடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ரயில்வே நிர்வாகம், அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்தது. இதையடுத்து, அப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேலும், சுரங்கப்பாதையின் கிழக்கு, மேற்கு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் கான்கிரீட் தளம் அமைத்தல் மற்றும் பக்கவாட்டுச்சுவர் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இப்பணி தொடங்குவதற்கு முன்னரே, காமராஜர் புறவழிச்சாலையில் உள்ள பிரதான குடிநீர் குழாய்களை அகற்றி புதிய குழாய்கள் அமைக்க நகராட்சிக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், நகராட்சி நிர்வாகம், பிரதான குடிநீர் குழாய்களை அகற்றி வேறு பகுதியில் பதிப்பதற்கு இதுவரை ஒப்பந்தப்புள்ளி விடவில்லை. இதனால் வேறு வழியின்றி, நெடுஞ்சாலைத்துறையினர் ரயில்வே சுரங்க பாதை பணியை தொடங்கி விட்டனர். இதனால், பிரதான குடிநீர் குழாய்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக ஆத்து மேடுப் பகுதியில் உள்ள 800 குடும்பத்தினருக்கு கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. இதுகுறித்து அப்பகுதி முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ஆரோக்கியராஜ் மற்றும் பொதுமக்கள், நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது.
ஏராளமான வீடுகளில் ஆழ்துளை கிணறு இல்லாததால், வீட்டுப் புழக்கத்திற்கு தேவையான தண்ணீர் முதல் குடிநீர் வரை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் இருந்த அடி குழாய் அனைத்தும் சேதமடைந்து விட்டன.
அதனால், பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, உடைந்த குழாய்க்கு பதில் புதிய குடிநீர் குழாய் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT