விருதுநகர்

விருதுநகரில் முன்அறிவிப்பின்றி ரயில்வே கடவுப்பாதை மூடல்: வாகன ஓட்டிகள் அவதி

DIN

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள ரயில்வே கடவுப்பாதை எந்த வித முன்னறிவிப்புமின்றி புதன்கிழமை மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
 விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியின் இடையே ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இந்த ரயில்வே தண்டவாளம் வழியாக செங்கோட்டை செல்லும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வழியில் நாள்தோறும் எட்டு முறை ரயில்கள் சென்று வருவதால், அந்த வேளைகளில் கடவுப்பாதை மூடப்பட்டு திறக்கப்படும். மேலும் சாத்தூர், கோவில்பட்டி, நாகர்கோவில் உள்ளிட்ட பேருந்துகள் விருதுநகருக்கும் வரும் போது, இந்த ரயில்வே கடவுப்பாதை வழியாக தான் சென்று வரும். அதேபோல், சூலக்கரை, கூரைகுண்டு, மாத்தநாயக்கன்பட்டி, மீசலூர், தாதம் பட்டி, இனாம் ரெட்டியபட்டி, மருளூத்து, ஒண்டிப்புலி நாயக்கனூர், ஆர்.ஆர். நகர், முதலிபட்டி முதலான கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த ரயில்வே கடவுப் பாதையைக் கடந்து தான் செல்வர். விருதுநகர் வழியாக ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வோரும் இந்த வழியையே பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இந்த ரயில்வே கடவுப் பாதை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலை யில், ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதாகக் கூறி புதன்கிழமை எந்த வித முன் அறிவிப்புமின்றி இந்த ரயில்வே கடவுப்பாதையை மூடினர். பராமரிப்பு பணிகள் நடைபெறுவது குறித்து விருதுநகர் ரயில்வே நிர்வாகம் முன்னரே அறிவிப்பு வெளியிடாததால் ஏராளமான வாகன ஓட்டிகள், ரயில்வே கடவுப்பாதை வரை வந்து, மீண்டும் வந்த வழியில் திரும்பி நீண்ட தூரம் சென்று மாற்று பாதையில் சென்றனர். 
எனவே, தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது, பொது மக்கள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் நாளிதழ்கள், தொலைக் காட்சி ஊடகங்களில் செய்தி வெளியிட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT