காரியாபட்டி போக்குவரத்து பணிமனையை மாற்ற எதிர்ப்பு
காரியாபட்டியிலுள்ள அரசுப் போக்குவரத்து பணிமனையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளை
காரியாபட்டியிலுள்ள அரசுப் போக்குவரத்து பணிமனையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளை, வேறு போக்குவரத்து பணிமனைகளுக்கு மாற்றுவதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காரியாபட்டியில் தனியார் இடத்தை வாடகைக்கு பிடித்து அரசுப் போக்குவரத்து பணிமனை அமைக்கப்பட்டது. இந்தப் பணிமனையிலிருந்து மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் கிராமப் பகுதிகளுக்கு என மொத்தம் 22 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், நிதி நெருக்கடி மற்றும் குறைந்த எண்ணிக்கை பேருந்துகளுக்கான போக்குவரத்து பணிமனைகளை மூடுவதற்கு, போக்குவரத்துக் கழக நிர்வாகம் வாய்மொழி உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பேரில், இங்கிருந்து இயக்கப்பட்ட 2 பேருந்துகள் அருப்புக்கோட்டை போக்குவரத்து பணிமனைக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து, அனைத்து பேருந்துகளையும் படிப்படியாக விருதுநகர், மதுரை உள்ளிட்ட போக்குவரத்து பணிமனைகளுக்கு மாற்றம் செய்ய உள்ளதாக, போக்குவரத்து தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த காரியாபட்டி கிராம மக்கள், இப்பகுதியில் போக்குவரத்துப் பணிமனை தொடர்ந்து இயங்க வேண்டும் என்றும், பணிமனையை மூடும்பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றும், இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.