குடிநீர் வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர் அருகே மேலக்கோட்டையூர் கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை.
விருதுநகர் அருகே மேலக்கோட்டையூர் கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக குடிநீர் வழங்கக் கோரி அக்கிராம மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கிராமத்தைச் சேர்ந்த காந்திராஜன் தலைமை வகித்தார்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் கலந்து கொண்டு பேசுகை யில், மேலக்கோட்டையூர் கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக குடிநீர் வழங்கப்பட வில்லை. இதனால், பொதுமக்கள் பணம் கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன் றிய அலுவலகங்களில் பலமுறை புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, உடனடி யாக குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கிராமத்தின் மேற்கு பகுதியில் புதிதாக 2 ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். அதேபோல், பழுதடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலக்கோட்டையூர் கிராம பொது மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.
அடிப்படை வசதி கோரி மனு:
விருதுநகர் அருகே கூரைக்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட நிலா நகர் மற்றும் நிறைவாழ்வு நகர் பகுதியில் தெரு விளக்கு, சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்திடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது : கூரைக்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட நிலா நகர் மற்றும் நிறைவாழ்வு நகர் பகுதியில் புதிய வீடுகள் அதிகளவு கட்டப் பட்டு வருகின்றன. ஆனால், இப்பகுதியில் தெரு விளக்கு வசதி செய்து தரப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகின்றனர். அதேபோல், இங்கு குடிநீர் வசதி இல்லாததால், வேறு வழியின்றி ஒரு குடம் குடிநீரை ரூ. 10 விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். எனவே, தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் இப்பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும். மேலும், நீண்ட தூரம் நடந்து சென்று தான் சிவகாசி ஆற்றுப்பாலம் சாலை அல்லது சாத்தூர் சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, கவுசிகா ஆற்றின் கரையில் சாலை வசதி செய்து கொடுத்தால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எளிதில் நகர் பகுதிக்குள் சென்று வர முடியும்.
எனவே தெரு விளக்கு, குடிநீர், சாலை வசதிகள் ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.