சிவகாசியில் குழந்தைகளுக்கான மினி மாரத்தான் போட்டி
ஜேசிஐ சிவகாசி டைனமிக் சங்கம் சார்பில், அரிமா, சுழற்சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன், பட்டாசுத் தொழில்
ஜேசிஐ சிவகாசி டைனமிக் சங்கம் சார்பில், அரிமா, சுழற்சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன், பட்டாசுத் தொழில் சிறப்பாக நடைபெற வேண்டும் என குழந்தைகளுக்கான மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
அண்ணாமலை நாடார்-உண்ணாமலைஅம்மாள் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இப்போட்டியை, விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மு.ராஜராஜன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இப்போட்டியில், 4 முதல் 5 வயது குழந்தைகளுக்கு 0.5 கி.மீ. மற்றும் 6 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு1 கி.மீ. தொலைவு என நிர்ணயிக்கப்பட்டு, இந்த இரு பிரிவிலும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். மேலும், 9 முதல் 12 வயது சிறுவர்களுக்கு 2 கி.மீ., 13 முதல் 15 வயது சிறுவர்களுக்கு 3 கி.மீ. தொலைவு என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில், மொத்தம் 6,100 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவருக்கும் டி-சர்ட், சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை தொழிலதிபர் ரவிச்சந்திரன், ஜேஸீஸ் சங்க மண்டலத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வழங்கினர்.
சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சிவகாசி டைனமிக் சங்கத் தலைவர் பாலாஜி நன்றி கூறினார்.