விருதுநகர்

மல்லாங்கிணறில் இரு தரப்பினர் மோதல்: ஆய்வாளர் உள்பட 3 போலீஸார் காயம்

DIN


விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் சுவாமி கும்பிடுவதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிலரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீஸார்  விசாரணை நடத்தினர். அப்போது, ஒரு தரப்பினர் கல் வீசித் தாக்கியதில் காவல் ஆய்வாளர் உள்பட மூன்று போலீஸார் சனிக்கிழமை காயமடைந்தனர்.
மல்லாங்கிணறில் நாகப்பசாமி கோயில் தெருவில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும், கட்டபொம்மன் தெருவில் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். இங்குள்ள காளியம்மன் கோயிலில் சுவாமி கும்பிடுவது தொடர்பாக இந்த இரு சமுதாயத்தினரிடையே முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில், காளியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்களும் மோதிக் கொண்டனர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். இந்நிலையில், சனிக்கிழமை காலை இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் மீண்டும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இத்தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இரு தரப்பிலும் சுமார் 15 பேரை விசாரணைக்காக  காவல் நிலையத்துக்கு  அழைத்து வந்தனர். அப்போது, நாகப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்த சிலர் காவல் நிலையத்துக்கு வந்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மல்லாங்கிணறு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல் ஆய்வாளர் அன்னராஜா, அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதை ஏற்றுக் கொள்ளாத சிலர் போலீஸார் மற்றும் காவல் நிலையம் மீது கல் வீசித் தாக்கினர். இதில், காவல் ஆய்வாளர் அன்னராஜா தலையில் பலத்த காயமடைந்தார்.
 மேலும்,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்வம், பெண் காவலர் சுப்புலெட்சுமி ஆகியோரும் காயமடைந்தனர். 
இதையடுத்து இவர்கள் அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 
 மேலும், இந்த மோதலில் காயமடைந்த பன்னீர் செல்வம், காளிதாஸ், காளிமுத்து, ஆண்டிச்சி, விவேக் ஆகியோரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இத்தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு. ராஜராஜன், அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து காயமடைந்த போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டு ஆறுதல் கூறினார். இதையடுத்து மல்லாங்கிணறில் மீண்டும் பிரச்னை ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT